அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யக் கோரி, வெள்ளை மாளிகை முன் அமெரிக்க-கனடிய தமிழர்கள் ஆர்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை (24-01-2011) காலை 11மணி முதல் மாலை 3 மணி வரை இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், ஈழத்தமிழ் மக்களுடன் இணைந்து இந்திய தமிழகத்து உறவுகளும் பங்கெடுத்திருக்கின்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் ' மனித குலத்துக்கு எதிரான, இனப்படு கொலையிலும், போர் குற்றங்களிலும் சம்பந்தப்படுகின்றவர்கள் மீது, உலக நாடுகளும், உலகப் பொது மன்றமும் தார்மீகரீதிய மட்டுமல்ல சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளதெனவும்,இதன் அடிப்படையில், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களின் அழிவுக்கு பிரதான பாத்திரம் வகித்துள்ள சிறிலங்கா அரசுத் தலைவரை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த அமெரிக்க ஒபமா அரசை வேண்டுவதாக கூறினார்.
அமெரிக்க அரசுத்தலைவரின் வாசல்தளமான வெள்ளைமாளிகை முன்றலை மையமாக கொண்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கெடுத்த மக்கள், ஹிலரி கிளிங்டன் அவர்களுடைய தேசிய திணைக்களத்துக்கும் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பிலான நீதிவிசாரணை திணைக்களத்துக்கும் சென்று தங்களுடை கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கையளித்தனர்.
அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தில் தற்போது சிகிச்சைக்காக தங்கியுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மீது தொடர்சியான அழுத்தத்தை பல்வேறு வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.