தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் தினமும் 5 க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடல்கள் காடா துணிகளால் கட்டப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் உடல்களை பெற வரும் சிலரிடம் காடா துணிகளை வெளியில் இருந்து வாங்கி வருமாறு பிரேத பரிசோதனை கூட ஊழியர்கள் கூறுவது போல் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் அமுதவல்லி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை கூடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் காமராஜ் (வயது 59), தமிழரசு (42) ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.