அருள்மிகு மாசாணியம்மன் கோயில் (ஆங்கிலம்: 'Masani Amman) தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். மாசாணியம்மன் சக்தி தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. இந்த அம்மன் "மாசாணி தேவி" என்று வட இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இக் கோயில் இந்தியாவிலுள்ள ஆனைமலை, பொள்ளாச்சியில் உள்ளது. [1][2]
பொள்ளாச்சியிலிருந்து தென்-மேற்கு திசையில் 24 கி.மீ. தொலைவில், அருள்மிகு மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இது ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இக் கோயிலின் பின்புலமாக ஆனைமலைக் குன்றின் பசுமையினைக் காணலாம்.
இக்கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும். இக் கோயிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.