#DrSaravAyush #BloodPressure #இரத்த_கொதிப்பு
இரத்த அழுத்தத்திற்கான அறிவுரை
இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.
இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?
1732-ல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ மீட்டர்' என்ற கருவியை வைத்து அளந்தார். 1896-ல் 'சிவரோசி' என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் 'ஸ்பிக்மோ மேனோ மீட்டரை' கண்டு பிடித்தார். 1905-ல்தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.
உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'ரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.
ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை.
106 முதல் 115 வரை.
115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
எதனால் ரத்த அழுத்தம அதிகமாகிறது?
காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.
இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந்நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.
ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?
முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். 'ஈ.சி.ஜி.' என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய 'எக்ஸ்ரே' பரிசோதனை உதவும். 'எக்கோ', 'ஆஞ்சியோகிராம்' போன்ற பரிசோதனைகளைக்கூட செய்து பார்க்கலாம்.