293வது மதுரை ஆதினத்திற்கு பீடரோகன நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது

2021-08-23 5

மடத்தில் தினசரி அன்னதானம், ஆதினத்திற்கு சொந்தமான கோவில்களில் திருப்பணிகள், மீனாட்சியம்மன் கோவிலில் தினசரி உஷாபிஷேகம் உள்ளிட்ட 6 உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதினத்தின் 292வது பீடாதிபதியாக இருந்துவந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கடந்த 13ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். (முத்தி அடைந்தார்).

இதனையடுத்து அவரது உடல் ஆதின நடைமுறைப்படி முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதினத்திற்கு சொந்தமான இடத்தில் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

292வது மதுரை ஆதினமான அருணகிரிநாதர் காலமான நிலையில் கடந்த 14ஆம் தேதி தருமை ஆதீனம் ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293-ஆவது மதுரை ஆதினமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் 10நாட்களின் முடிவாக இன்று முனிச்சாலை பகுதியில் 292வது ஆதினம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குருபூஜை நடத்தப்பட்டது.

இதனையடுத்து மதுரை ஆதினத்தின் 293-ஆவது ஆதினமாக மதுரை ஆதின மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு தருமைபுர ஆதினத்தின் 27வது குரு மகாசன்னிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக சுவாமிகள் முன்பாக நடைபெற்றது

இதனை தொடர்ந்து மதுரை ஆதினத்தின் சார்பில் விடுப்பட்டு போன மதுரை மீனாட்சியம்மன் கோவில் உஷாகால கட்டளைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும், மதுரை ஆதின திருமடத்தில் நித்ய பூஜை, மாகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படும், மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4கோவில்களிலும் தினசரி நித்யபடி பூஜைகள் நடத்தப்படவும், குடமுழக்கு உள்ளிட்ட திருப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினம், பேரூர் ஆதினம், சிரவை ஆதினம் உள்ளிட்ட பல்வேறு மடங்களின் ஆதினங்கள் சார்பிலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆசிபெற்று சென்றனர்

பீடத்தில் அமர்ந்த பின் மதியம் 1.30 மணியளவில் மாகேஸ்வர பூஜையும், இன்று மாலை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் வழிபாடும், அதனையடுத்து குருமூர்த்த சிறப்பு வழிபாடும் , தொடர்ச்சியாக இரவு 8 மணிக்குமேல் பட்டினப்பிரவேசமும் கொலுக்காட்சியும் நிகழவுள்ளது.

மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதினமாக பொறுப்பேற்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த திருவாளர் காந்திமதிநாதன் பிள்ளை - திருமதி ஜானகி அம்மை தம்பதியினருக்கு 25.03.1954 ல் மகனாக பிறந்தார்..
இவரது இயற்பெயர் பகவதிலட்சுமணன்.

தனது 21ஆவது வயதில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத்தம்பிரானாகவும், 1976ஆம் ஆண்டு முதல் 1980வரை தருமையாதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும், 1980 முதல் 2019ஆம் ஆண்டு வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தித் தம்பிரானாக 39 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்கள்.

மதுரை ஆதீனத்தில் கடந்த 2019ஜூன் 6ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதரால் சமய, விசேஷ நிர்வாண தீட்சை செய்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டு இளைய ஆதினமாக அறிவிக்கப்பட்டிருந்தார்

Videos similaires