மதுரை சுதந்திர தின விழா நடக்க உள்ள மைதானத்தின் முன்பு சுதந்திர போராட்ட தியாகியின் வாரிசுகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
மதுரையில் 75வது சுதந்திர தின விழா மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் துவங்க இருந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுதந்திரக் கொடியை ஏற்ற வருவதற்கு முன்பாக மைதானத்தின் பிரதான வாயில் முன்பு சுதந்திரப் போராட்டத் தியாகி ராமலிங்கத்தின் மகன் மற்றும் மனைவி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முள்ளிப்பள்ளம் காடுபட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். இவருக்கு அரசு தியாகி என்ற செப்புபட்டயம் கொடுத்திருக்கிறது இவர் இவருடைய மனைவி மாரியம்மாள் மகன் கார்த்திகேயன் ஆகியோர் காடு பட்டியில் 6 சென்ட் நிலத்தில் வீடு 6 ஏக்கர் விவசாய நிலம் 6 ஏக்கர் காடு ஆகியவற்றை சொந்தமாக வைத்துள்ளதாக கூறுகின்றனர் ஆனால் அதற்கு மூலப்பத்திரம் தங்கள் பெயரில் இருப்பதாகவும் அதற்கு பட்டா கேட்டால் அரசு அதிகாரிகள் தர மறுக்கிறார்கள் வேறு ஒருவருக்கு பட்டா போட்டுக் கொடுத்துவிட்டு எங்களுக்கு பட்டா போட்டு தர மறுக்கிறார்கள் 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம் சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்திற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எந்த நிலை ஏற்படும் எங்களுக்கு பட்டா வழங்காவிட்டால் இதே இடத்தில் உயிரை விடுவதை தவிர வேறு வழி இல்லை எனக் கூறி மதுரையில் சுதந்திர தின விழா நடக்க இருக்கும் மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பிரதான வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக அழைத்துச் சென்றனர்.