கேரள அரசு மலையாளத்தை கட்டாயப் பாடமாக்கியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. இது தமிழகத்திலும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் முதல் ஐந்தாம் வகுப்பு வரையும் அதன் பின்னர் ஆண்டு தோறும் ஒவ்வொரு வகுப்பாக விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு செய்திகள் உள்ளன. அது 'தாய்மொழிக்கல்விக்கும் தாய்மொழி வழிக்கல்விக்கும்' வேறுபாடுகள் இருக்கின்றன. தமிழகத்தில் அறிவித்ததும்,கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளதும் தாய்மொழிக்கல்விதான். தாய்மொழி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை நீதிமன்ற உத்தரவால் மறுக்கப்படுகிறது, ஆனால் தாய்மொழிக்கல்வியில் அந்தச்சிக்கல் இல்லை. ஒரு மாநிலத்தில் படிக்கும் எந்த ஒரு பிள்ளையும் அந்த மாநிலத்தின் மொழியைக் கண்டிப்பாக கற்றிருக்க வேண்டும் என்பது நியாயமான ஒன்று. அதே போல மத்திய அரசின் பாடத்திட்டங்களான சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சியில் படிக்கும் மாணவர்களும் மாநில மொழியைக் கட்டாயம் ஆக்கியுள்ளது துணிச்சலான அறிவிப்பு.