கோத்தகிரியில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால், காட்டு யானைகள் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. மேலும், சாலையின் ஓரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் யானைகள் பகல் நேரங்களில் முகாமிடுவதால், பணி செய்ய முடியாமல் தேயிலை தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவருவதால், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே, காட்டு யானைகளை வேறு வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.