நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்டு வரும் குரல் மாதிரி முடிவு இரண்டு நாட்களில் வெளியாகும் - சிபிசிஐடி

2018-07-17 0

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் அந்தக் கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்து நிர்மலாதேவி பேசிய உரையாடல் பதிவு சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த உரையாடலில் பதிவானது நிர்மலாதேவியின் குரல் தானா என்பதை குரல் மாதிரி பரிசோதனை மூலம் உறுதி செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கக்கோரி விருதுநகர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், மதுரை சிறையில் குரல் மாதிரி பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், மதுரை சிறையில் குரல் மாதிரி பரிசோதனைக்கு வசதி இல்லாததால், குரல் பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார். அதன்படி சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள தடயவியல் மையத்தில் வைத்து நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்னும் இரண்டு நாட்களில் குரல் மாதிரி பரிசோதனை முடிவு அறிவிக்கப்படும் என சிபிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires