முதல்வரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய இயக்குநர்கள்!

2018-04-27 309

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகளும், திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகளும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
முதல்வரைச் சந்தித்த பின்பு பேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், "முதல்வரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தோம். சிறந்த படத்தைத் தேர்வு செய்யும்போது மத்திய அரசு தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ், கேடயம், பரிசுத் தொகை வழங்குவது போல தமிழக அரசும் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம்.
சென்னையில் பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஷூட்டிங் நடத்த அதிக செலவு பிடிக்கிறது. எனவே, சென்னையில் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கவேண்டும் எனும் கோரிக்கையும் வைத்தோம்." எனக் கூறினார்.
ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியபோது, "தமிழக அரசு, ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு பையனூரில் 65 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. அந்த இடத்தை ஓ.எம்.ஆர் சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மருத்துவமனை கட்ட நகருக்குள் இடம் வழங்க வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என அனைத்தையும் இணைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி கட்டுப்பாட்டில் சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கவேண்டும்" எனும் கோரிக்கை வைத்ததாகக் கூறினார். முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாராம்.


Tamil Film Directors Association and FEFSI executives met the CM Edappadi Palanisamy at the Secretariat and urged various demands.

#tamilfilm #director #producer #council #meeting #chiefminister #tamilcinema #edappadipalanisamy