தமிழ் சினிமா துறையில் கடந்த ஒன்றரை மாதமாக ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்த இந்த ஸ்ட்ரைக்கினால் கடந்த மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் செய்யப்படவில்லை. டிஜிட்டல் சேவைக் கட்டண உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஸ்ட்ரைக் மூலம் சினிமாத்துறையில் நிலவும் பல பிரச்னைகளுக்கும் ஒருசேர தீர்வு காண்பதற்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தை முழுமைப்படுத்தும் விதமாக ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங், பட விழாக்கள் ஆகியவற்றிற்கும் தடை உத்தரவு போட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஒரு மாதத்திற்கும் மேலாக ஸ்தம்பித்துப் போனது. இந்நிலையில், நேற்று தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி ஆகியோர் முன்னிலையில் தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவன உரிமையாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால், ஸ்ட்ரைக் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷூட்டிங் உள்ளிட்ட பிற பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றன. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் டிக்கெட் கட்டணம், ஆன்லைன் புக்கிங் தொடர்பாக, இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இனி தியேட்டர்களில் படங்களுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வரும் ஜூன் 1 முதல் குறைந்த புக்கிங் கட்டணத்தில் டிக்கெட் புக் செய்யும் விதமாக புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Producer council president Vishal announces 2 schemes regards cinema ticket price and online booking charges.
#cinemastrike #producercouncil #vishal