சென்னையிலுள்ள பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் சுற்றித் திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில், மாணவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் சக பயணிகளை அச்சுறுத்துவதாகவும், ரயில்வே பாதுகாப்பு படைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு போலீசார், ஆயுதம் வைத்திருப்பதாகக் கூறப்பட்டவர்களை ஒவ்வொரு ரயில் பெட்டியாக தேடினர். போலீசார் தேடுவதை பார்த்ததும், மாணவர்கள் ஓட்டம் பிடிக்க துவங்கினர். அவர்களை விரட்டிச் சென்ற பாதுகாப்பு போலீசார் 3 மாணவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும், மாணவர்கள் என தெரியவந்தது. முதலாமாண்டு மாணவர்களே இப்படி ரவுடித்தனத்தில் ஈடுபட்ட சம்பவம் கல்வியாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னையில் இப்படி நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பதும் அவர்கள் கவலைக்கு காரணம். சில மாதங்கள் முன்பு, சென்னை - ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து பயணிகளை அச்சுறுத்தியபடி பயணம் செய்தனர். இந்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கத்தியுடன் திரிந்த 4 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்த போலீசார் 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். அந்த 4 பேரும் இனி வாழ்க்கையில் ரயிலில் ஏறவே மாட்டோம் எங்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு கதறும் காட்சி வெளியாகியிருந்தது.