ஹைதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறக்க முயற்சித்தபோது டயர் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்த விபத்தில் நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர், நேற்று இரவு 8.55 மணிக்கு, திருப்பதியில் இருந்து, ஹைதராபாத் செல்லும் இண்டிகோ - 6E 7117 விமானத்தில் பயணித்தார். விமானம், இரவு 10.25 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் ஒரு டயர் திடீரென வெடித்தது. இதனால், டயர் வெடித்த இடத்தில் இருந்து நெருப்பு வெளியேறியது இதையடுத்து பயணிகள் பதற்றமடைந்தனர். ஆயினும் விமான நிலையத்திற்கு அவசர தகவல் அனுப்பப்பட்டு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நெருப்பை அணைத்து, அனைத்து பயணிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பத்திரமாக கீழே இறக்கினர். இதனால் விமானத்தில் இருந்த நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் உயிர்தப்பினர். விபத்து காரணமாக ஓடுதளம் மூடப்பட்டதையடுத்து 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.