சென்னை : இயேசு உயிர்த்தெழுந்தது நிரூபிக்கப்படவில்லை என இசைஞானி இளையராஜா கூறிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவின் இந்த கருத்து கிறிஸ்தவ மதத்தினரின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும்படி இருப்பதாகக் கூறி அவரது வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதற்கிடையே, இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல் எவரும் இருந்ததில்லை. இயேசு உயிர்த்தெழுந்ததாகக் கூறுவார்கள். ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை. உலகிலேயே உண்மையிலேயே உயிர்த்தெழுந்த ஒரே மகான் ரமண மகரிஷி மட்டும்தான். அதுவும் தனது 16 வயதில்", என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரின் கருத்து கிறிஸ்தவ மதத்தினரின் மத நம்பிக்கையைப் புண்படுத்தும்படி உள்ளதாக கூறி, சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் தி.நகரில் இருக்கும் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முயன்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தி.நகர் மேம்பாலம் அருகே போராட்டம் நடத்த முயன்றபோது, அங்கு வந்த போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். இதனால் இளையராஜா வீடு அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Ilayaraja comment on Jesus Christ is now controversial. This caused a brief stir in the nearby Ilayaraja house.