ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான பாக்சைட் தொழிற்சாலையை சட்டப் போராட்டங்களாலும் மக்கள் திரள் போராட்டங்களாலும் விரட்டி அடித்தனர் ஒடிஷாவின் ஆதிகுடிகளான டோங்கிரியா கோண்டுகள். ஒடிஷாவின் நியாம்கிரி மலைத் தொடர் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிந்து பரந்து கிடக்கிறது. இம்மலையில் கொட்டிக் கிடக்கும் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க வேட்டைக் களம் அமைத்தது வேதாந்தா குழுமம். பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மலைத் தொடரில் வாழ்ந்து வந்த டோங்கிரியா கோண்டுகளை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி மலை அடிவாரத்தில் வேதாந்தா கட்டிக் கொடுத்த 'முகாம்களில்' அடைக்கப்பட்டனர். ஆனாலும் ஒட்டுமொத்த டோங்கிரியா கோண்டுகளை வேதாந்தா குழுமத்தால் வெளியேற்ற முடியவில்லை. வேதாந்தா குழுமத்துக்கு எதிராக 12 ஆண்டுகாலம் இடை விடாத சட்ட யுத்தம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளை அதிரவைக்கும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்தனர் டோங்கிரியா கோண்டுகள். வெளியாட்கள் எவர் நுழைந்தாலும் வேதாந்தா குழுமத்தின் அடியாட்கள் என விரட்டி விரட்டி அடித்தனர் டோங்கிரியா கோண்டுகள். இதையடுத்து வேறுவழியே இல்லாமல் லாஞ்ஜிகர் வேதாந்தா பாக்சைட் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டது. டோங்கிரியா கோண்டு மக்களை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதும் தாய் நிலத்தைக் காக்க தீரமுடன் போராடி வெற்றிக் கொடி நாட்டியவர்கள் 'திராவிட பழங்குடியினராகிய' டோங்கிரியா கோண்டுகள். இவர்கள் பேசுவது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. நம்மால் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதுதான். இதேவழியில்தான் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூட பிஞ்சு குழந்தைகளும் இப்போது தூத்துக்குடி களத்தில்... ஜல்லிக்கட்டுக்காக கிளர்ந்தெழுந்த தமிழகம் இப்போது ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கிறது!
Odisha's Dongria Kondh an Indigenous people who live in Niyamgiri Hills won the Battle against the Sterlite's Vedanta bauxite mine.