சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்ததற்காக வாக்காளர்களை சந்தித்து டிடிவி. தினகரன் நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று தண்டயார்பேட்டை பகுதியில் தினகரனின் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த மேடையில் நடனக்கலைஞர்கள் சொப்பன சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தினகரனுக்காக காத்திருந்த மக்களை குஷிபடுத்தினர். சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் 20 ரூபாய் ஹவாலா டோக்கன் விவகாரத்தால் தொகுதி பக்கமே தலைகாட்டுவதில்லை என்று ஆளும்கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர். அதாவது தினகரனுக்கு வாக்களிக்க ரூ. 20 டோக்கன் கொடுக்கப்பட்டு தேர்தலுக்குப் பின் ரூ. 10 ஆயிரம் வரை பணம் வாக்காளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் தேர்தலுக்குப் பின் பணம் கொடுக்கவில்லை என்றும் வாக்காளர்கள் புலம்புவதாக அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை விமர்சித்து வருகின்றனர்.