பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாமல், திமுகவை குறை சொல்வது 6 ஆண்டுகளாக அதிமுக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் 500-க்கும் அதிகமான திமுகவினர் நேற்று கைது செய்யப்பட்டு அருகே இருந்த திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
சோழவந்தான் பகுதியில் நடந்த சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், அப்பகுதியில் தங்கி இருந்தார். திமுகவினர் கைது செய்யப்பட்டதை அறிந்து நேற்று வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் கைதான திமுகவினரை மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியுடன் சென்று சந்தித்தார்.
நான் அரசியலுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. அரசியல் களம் எனக்கு புதிதல்ல. அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் திமுகவை காரணம் காட்டுகின்றனர். இது கடந்த 6 ஆண்டுகளாக அதிமுக அரசின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுவதாக உள்ளது. வரும் காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக சார்பில் நடைபெறும் போராட்டங்களில் நான் பங்கேற்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
udhayanidhi stalin met dmk cadre in madurai