பாஜக,காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் நோட்டாவுடன்தான் போட்டியிட முடியும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை நக்கலடித்துள்ளார். கரூரில் எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் விழாவையொட்டி பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்டம், பாட்டத்துடன் கூடிய பொதுக்கூட்டமாக இது அமைந்தது. இதில் தம்பித்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தம்பித்துரை பேசுகையில், எம்ஜிஆர் நடிப்பின் மூலம் கிடைத்த புகழை மட்டும் வைத்து அரசியலுக்கு வரவில்லை. 30 ஆண்டு பொது வாழ்க்கைக்குப் பின்னர்தான் அரசியலுக்கு வந்தார். இன்று சில நடிகர்கள் எடுத்த எடுப்பிலேயே முதல்வராக வர நினைக்கின்றனர். தமிழகத்தில் திராவிட இயக்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக தேசியக் கட்சிகளால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களால் முடிந்ததெல்லாம் நோட்டாவுடன் போட்டியிட மட்டுமே முடியும் என்றார் தம்பித்துரை .