திருப்பூர் மங்கலம் சாலை பாரப்பாளையத்தை சேர்ந்தவர் சரத் பிரபு (28). எம்.பி.பி.எஸ். முடித்து டெல்லியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் (யு.சி.எம்.எஸ்.சி.) என்ற கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டின் கழிவறைக்கு வெளியே மயங்கி விழுந்து இறந்துள்ளார். தகவல்அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சரத் பிரபு இறந்து கிடந்த பகுதியில் ஊசி போடும் சிரஞ்சு, இன்சுலின் மற்றும் வேதிப்பொருள் இருந்ததாகவும் அதனை டாக்டர்களிடம் கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். அவர் தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.