அதிமுகவை அவதூறாக விமர்சனம் செய்த குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தினகரனின் ஆதரவாளர்களை 6 மாதத்துக்குப் பிறகு நீக்கியது குறித்து துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆண்மையற்றவர்கள் என அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் என்ற பதவிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கட்சி பேதமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இம்போடன்ட் என்ற வார்த்தைக்கு திறனற்றவர்கள் என்ற வார்த்தையும் உண்டு என்று குருமூர்த்தி விளக்கமளித்த போதிலும் இதை அதிமுகவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுக மீதான குருமூர்த்தியின் விமர்சனம் குறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேச வேண்டும். அதிமுகவை பற்றி பேச குருமூர்த்தி தகுதி இல்லை. விளம்பரத்துக்காகவே அதிமுகவை விமர்சிக்கிறார். முக அழகிரியின் குற்றச்சாட்டுக்கு முக ஸ்டாலினே பதில் தர வேண்டும். திமுகவை டெபாசிட் இழக்க செய்த ஆர்கே நகர் மக்களுக்கு வாழ்த்துகள். தினகரனின் வெற்றி என்பது தற்காலிகமானதுதான் என்றார் செல்லூர் ராஜூ.
Minister Sellur Raju says that Gurumurthy has to control his tongue and he has not eligible to criticise ADMK.