அரசு ஆரம்ப பள்ளியில் குழந்தைகளை பிரம்பால் தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வீராபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் கோதாவரி மாணவர்களை ஒழுங்காக படிக்கும் படி பலமுறை எச்சரித்துள்ளார். கோதாவரியின் எச்சரிக்கையை மாணவர்கள் கண்டு கொள்ளாமல் விளையாட்டிலேயே மும்மரமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் மாணவர்கள் படிக்காமல் உள்ளதை கண்டு கோதாவரி ஆத்திரமடைந்துள்ளார். நேற்று தனது வகுப்பில் கோதாவரி பாடம் நடத்திய போது மாணவர்கள் ஒருசிலர் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அதை கண்டு ஆத்திரமடைந்த அவர் கையில் வைத்திருந்த பிரம்பால் மாணர்களை அடித்துள்ளார்.
இதனால் மாணவர்களின் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் அடித்தது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அப்போது பெற்றோர்கள் மாணவர்களின் உடலை பார்த்த போது பிரம்பினால் அடித்த காயங்களில் இரத்தம் கட்டியுள்ளது. உடனே மாணவர்களை அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனிடையில் மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை கோதாவரிமீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.