ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் உடல் சென்னை இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடல் மாலை 6 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌத்தூர் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற காவல் ஆய்வாளர் பெரியபாண்டி நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பின் பெரியபாண்டியின் உடல் இன்று சென்னைக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தின் 5வது கேட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பேன்ட் வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலி செலுத்தினர். துக்கத்தை பதிவு செய்யும் வகையில் அவர்கள் கைகளில் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணி வரை பெரியபாண்டியின் உடல் சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.