சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக வாதாடிய வழக்கறிஞர் விஜயகுமார் விலகியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொன்ற வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே தஷ்வந்த் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்துள்ளான்.
இதனிடையே, தாய் சரளாவைக் கொன்றுவிட்டு தஷ்வந்த் மும்பைக்கு தப்பியோடினான். போலீசார் அவனை மும்பையில் கைது செய்த நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறி போலீசாரின் பிடியில் இருந்து தப்பினான் தஷ்வந்த்.இதையடுத்து மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்த அவனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.இந்நிலையில் தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று முன்தினம் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து தஷ்வந்த் இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது ஹாசினி கொலைவழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து உங்களுக்கு என வழக்கறிஞர் இல்லை என்ன செய்யப்போகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.