சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியா..? - மோதல் பற்றி சந்தானம் பேச்சு!- வீடியோ

2017-12-05 1

விடிவி கணேஷ் தயாரிப்பில், சந்தானம் நடித்துள்ள 'சக்க போடு போடு ராஜா' படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் ரிலீஸாக உள்ளது. ஏற்கெனவே சிவகார்த்திகேயனுக்கும், சந்தானத்துக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. சிவகார்த்திகேயன் ஹிரோவாக நடிக்கத் தொடங்கியதால்தான் சந்தானமும் நாயகனாக நடிக்க முடிவெடுத்தார் எனக் கூறப்படுவது உண்டு.
இந்நிலையில் 'சக்க போடு போடு ராஜா படத்தின்' பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் சந்தானம் பேசும்போது, 'சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டி இல்லை, அப்படியே இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இப்படத்தில் யுவன், அனிருத் ஆகியோர் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இதுகுறித்து, 'என்னை சினிமாவில் அறிமுகம் செய்த சிம்புவை, நான் இசையமைப்பாளராக அறிமுகம் செய்வது பெருமை.' எனப் பேசியிருக்கிறார் சந்தானம். 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று அளித்துள்ளது. படத்தில் சண்டைக்காட்சி உட்பட வன்முறைகள் அதிகமாக இருப்பதாக யு/ஏ சான்று அளித்துள்ளனர். 'இப்போது எல்லாம் அரிவாளை படத்தில் காண்பித்தால் கூட யு/ஏ சான்று தந்துவிடுகிறார்கள்' எனப் பேசியிருக்கிறார் சந்தானம்.