கன்னடத்தில் ஒளிபரப்பாகும் நந்தினி டிவி சீரியலைப் பார்த்து கர்நாடக மாநிலத்தில் 7 வயது சிறுமி தீ நடனத்தை ஆட முயற்சி செய்தபோது உடல் கருகி உயிரிழந்தார். மரணமடைந்த சிறுமியின் பெயர் பிரார்த்தனா என்பதாகும். 7வயதான சிறுமி பிரார்த்தனா தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹரிஹரா பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத்- சைத்ரா தம்பதியரின் மகளாவார். கூலி தொழில் செய்து வரும் இந்த தம்பதியருக்கு சுட்டிக்குழந்தையாக இருந்தாள் பிரார்த்தனா. அதே பகுதியில் தூய மேரி கான்வெண்ட் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தாள் அந்த சிறுமி.
சிறுமி பிரார்த்தனாவிற்கு உதயா டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி டிவி சீரியல் என்றாலே மிகவும் பிடிக்குமாம். ஒரு எபிசோடு விடாமல் பார்ப்பாராம். அதுவும் அந்த சீரியலின் முதலில் ஒளிபரப்பாகும் நடனத்தை ரசித்து பார்ப்பாராம்.
சில தினங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், இந்த சீரியலை பார்த்துக்கொண்டிருந்தார் பிரார்த்தனா. பாடல் ஒளிபரப்பானது. நடனமாடிய நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன. அதைப் பார்த்த பிரார்த்தனா, அதேபோல் முயற்சி செய்தார்.
கையில் ஒரு பேப்பரை எடுத்துத் தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள் பிரார்த்தனா. அப்போது எதிர்பாராத விதமாக பிரார்த்தனாவின் உடைகளில் தீப்பற்றிக்கொண்டது. தீ உடல் முழுவதும் பரவியது. எனவே, வலி தாங்க முடியாமல் அலறினாள். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர்.
உடனடியாக தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டுசென்றனர். தற்போது 15 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி கடந்த 29ஆம் தேதி மரணமடைந்தாள். அழகாக வளர்த்த மகளை இப்படி பறி கொடுத்து விட்டோமே என்று பிரார்த்தனாவின் பெற்றோர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
A seven-year-old girl from Karnataka passed away on November 11 after she set herself in an imitation of an act in a Kannada television serial, The incident took place in Davanagere district’s Harihar town.