அதிமுகவின் முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் அணியினருக்கு அழைப்பு விடுக்காததால் தாம் முகநூலில் தெரிவித்த அதே நிலை நீடிப்பதாக மைத்ரேயன் எம்.பி. குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைந்த பிறகு ஓபிஎஸ் தலைமையிலும், எடப்பாடி தலைமையிலும் இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரியதால் அந்த சின்னமானது முடக்கப்பட்டது. அத்துடன் சின்னம், கொடி, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
அதிமுகவின் இரு அணிகளும் கட்சியின் நலன் கருதி கடந்த ஆகஸ்ட் மாதம் அமாவாசை நன்னாளில் இணைந்தனர். இதையடுத்து இரு அணிகளும் சேர்ந்தே இரட்டை இலைக்காக தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தன.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆன போதிலும் மனங்கள் இணைய வில்லை என்ற கருத்தை மைத்ரேயன் முன்வைத்திருந்தார். மேலும் இது மைத்ரேயனின் சொந்த கருத்து என்று தம்பிதுரை கூறியதை மறுத்தார். இது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றும் முதல்வர் அணியினர் தங்களை ஓபிஎஸ் அணியினராகவே பார்க்கின்றனர் என்றும் மைத்ரேயன் தெரிவித்திருந்தார்.
இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி - ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை கொண்டாட மதுரையில் தோப்பூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, இரட்டை இலை சின்னத்தை மீட்டதற்கான விழா, அதிமுக கொடியேற்று விழா என இன்று நடைபெற்றது.
Maithreyan MP says that O.Panneer selvam and his team are not inviting for Madurai Mupperum Vizha. He also says that situation continues as what he said in his FB.