அறம் படத்தை இயக்கியதற்காக தனக்கு போனில் கொலை மிரட்டல்கள் வருவதாக கோபி நயினார் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள 'அறம்' படம் கடந்த வாரம் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் அரசியல், சமூக அவலத்தையும், அரசியல்வாதிகளின் மக்கள் விரோதப் போக்கையும் படம் பிடித்துள்ளது. கண்டுகொள்ளப்படாத மக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசியதால், மக்கள் இந்தப் படத்தை தங்கள் படமாகவே கொண்டாடுகிறார்கள். அதேநேரம் இந்தப் படத்தை எடுத்ததற்காக சிலர் கோபி நயினாரை கடுமையாகத் திட்டுகிறார்களாம். இது குறித்து கோபி நயினார் கூறுகையில், "அறம் கதை அரசின் அலட்சியத்தைச் சொல்லும் வகையில் அமைந்திருக்கும். அதனால் வசனங்களை ஷார்ப்பாக இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். இந்த படத்தை நிறைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். ஆனால் சிலர் நள்ளிரவில் போன் செய்து என்னையும், என் குடும்ப பெண்களையும் கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள். தவறான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். இதனால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என்னைச் சாடுகிறார்கள். எதுவாக இருந்தாலும் நேரடியாக அமர்ந்து விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.