பாஜக மேலிடம் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் கட்சி நிர்வாகிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 9,14-ல் இரு கட்டமாக நடைபெறுகிறது. டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இத்தேர்தலுக்காக 2 கட்ட வேட்பாளர்களை பாஜக வெளியிட்டுள்ளது. இதுவரை மொத்தம் 106 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 82 வயதாகும் பாஜக எம்.பி. லிலாதர் வகேலா மகனுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் தராதற்கு எதிராக பொங்கியுள்ளார். மகனுக்கு சீட் இல்லை எனில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் ஐ.கே. ஜடேஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் பாஜக மாநில தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நன்டோட், நிகோல், நரோடா, ஹேரளூ, அங்க்லவ் தொகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பாஜக தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜக டெல்லி மேலிடத்துக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பியதால அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குஜராத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேப்டாளர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
BJP workers protest in 20 places across Gujarat after the party released names of 106 candidates for assembly elections.