இன்று மாலைக்குப் பின் கனமழை பெய்யும் என நார்வே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இன்று இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே அடித்து ஆடியது வடகிழக்குப் பருவ மழை. காவிரி டெல்டாவில் கொட்டிய மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. சென்னையிலும் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. மெரினாவில் கொட்டித் தீர்த்த 30 சென்டி மீட்டர் மழையால் கடல் எது கரை எது என தெரியாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னையில் விடுமுறை விட்டிருந்த மழை நேற்று முதல் மீண்டும் வேலையை ஆரம்பித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.