ஸ்ரீவைகுண்டம் அணையில் முற்றுகை போராட்டம்: நல்லகண்ணு, சீமான் உள்பட பலர் கைது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தூர்வாரும் பணியை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, நாம் தமிழர் கட்சியின் சீமான், அணுஉலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோருடன் கிராம மக்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பை மீறி முற்றுகையிட முயன்றதால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நல்லகண்ணு, சீமான் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி 7 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த பணி முறையாக நடைபெறவில்லை என்றும், அதன் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், 7-ஆவது கட்டத்தில் தூர்வாருவதை விடுத்து, அணைக்கு அருகிலுள்ள பகுதியை முதற்கட்டமாக தூர்வார வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிசிடிவி கேமிரா பொருத்தி தூர்வாரும் பணியை கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.